சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகள் அகற்றம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்

சீனாவின் வடக்கு மாகாணத்திலுள்ள மசூதிகளை அகற்றும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்குச் சீனாவைச் சேர்ந்த நிங்ஸியா மற்றும் கன்சு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை மதத்தினரான முஸ்லீம் சமூகத்துக்குச் சொந்தமான மசூதிகளை மறுசீரமைப்பது அல்லது இடிப்பது போன்ற செயல்களில் அந்த நாட்டு அரசாங்கம் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூயோர்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வாளர்கள் அளித்துள்ள தரவுகளின்படி, நிங்ஸியா, கன்சு மாகாணங்களில் மசூதிகளின் எண்ணிக்கையை சீன அரசு கணிசமாகக் குறைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஸி ஜின்பிங் தலைமையிலான ஆட்சி அமைந்தததைத் தொடர்ந்து, சீனாவின் மத மற்றும் இன ரீதியிலான சிறுபான்மையினர் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் ஒருபகுதியாக சீன பாரம்பரியம் அல்லாத சமூகத்துக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்களை இடித்து அதன் வடிவங்களை மாற்றுவதில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.

இஸ்லாமிய மதம் தொடர்பான இடங்கள் மற்றும் கட்டடங்கள் உருவாகுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு நேரடியாக சீன அரசு சார்பில் கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிங்ஸியா பகுதியிலுள்ள இரு கிராமப் பகுதிகளில் செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தியுள்ளது.
இதில், 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 6 மசூதிகளின் வட்ட வடிவிலான மேற்புறங்கள் அகற்றப்பட்டதும், 4 மசூதிகள் முழுவதுமாகச் சீரமைக்கப்பட்டதும், 3 மசூதிகள் முழுவதுமாக இடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

நிங்ஸியா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சுமார் 1,300 மசூதிகள் உள்ளன. சீனாவில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய மக்கள் வாழ்வது இப்பகுதியில்தான். 2020ஆம் ஆண்டுவரை சீனாவில் பதிவாகியுள்ள மசூதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு நிங்ஸியாவில் உள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட அல்லது இடிக்கப்பட்ட மசூதிகளின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அரச ஆவணங்களில் உள்ள தரவுகளின்படி நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகளுக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply