மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இலங்கை கிரிக்கெட், இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக பரிசீலனையை மீண்டும் ஒத்திவைத்தது.
அதன்படி, இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளை மேலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதுடன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமரகோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவினால் இந்த நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டது.
இதற்கமைய, நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் உட்பட மூன்று நீதிபதிகள் மனுவை பரிசீலிப்பதில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அன்று, உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டது.
மறுநாள், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலக் குழுவுக்கு 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது. விளையாட்டு அமைச்சரின் இந்த நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பின்னர், நவம்பர் 13 அன்று, தடை உத்தரவை நீக்கக் கோரி அமைச்சர் ரணசிங்க ஒரு பிரேரணையை தாக்கல் செய்தார்.