இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பை நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடமாக அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு புதிய இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளித்த தூதுவர், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவதற்காக இலங்கையின் தனியார் துறையுடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக இத்தாலிய வர்த்தக முகவர் குழுவொன்று அனுப்பப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் புதிய இத்தாலிய தூதுவர், எதிர்வரும் சில வாரங்களில் தாமதம் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இத்தாலிய பிரதித் தூதுவர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.