ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தனது கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த போதே சில மணி நேரங்களிலேயே ஆயர் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பல மதங்கள் குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து வாக்குமூலம் அளிக்க, இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்துள்ளார்.
ஆயர் பெர்னாண்டோ தனது பிரசங்கங்களில் ஒன்றின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அதில் புத்தர் மற்றும் பிற மதப் பிரமுகர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகள் உள்ளடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆயர் பெர்னாண்டோவின் வெளிநாட்டுப்பயணங்களைத் தடை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மே 14 அன்று சிங்கப்பூருக்குச் சென்ற அவர் தனது கருத்துக்களால் ஏற்பட்ட பல மாதங்களுடனான சர்ச்சைகளுக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் நாடு திரும்பியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவு, பாதிரியார் நாட்டுக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் அவரிடம் வாக்குமூலம் பெற்றது.
நவம்பர் 17 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், ஆயர் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்தவுடன் அவரைக் கைது செய்ய வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டதுடன் ஆயர் பெர்னாண்டோ நாட்டிற்கு வந்த 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சைபர் கிரைம் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.