ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பிரபல பாதாள உலக நபர்களை மேலும் 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி , மேன்முறையீட்டு நீதிமன்றம், ஹரக் கட்டாவை தடுப்புக் காவலில் வைக்க அவருக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், அவரை பொருத்தமான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.
கடந்த 1 ஆம் திகதி மடகாஸ்கரில் வைத்து ஹரக் கட்டா எனப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் அவரது பிரபலமற்ற கூட்டாளியான குடு சலிந்து எனப்படும் சாலிந்து மல்ஷிகா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, அவர்கள் நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரு பாதாள உலகப் பிரமுகர்களையும் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சு முதற்கட்டமாக 90 நாள் உத்தரவை பிறப்பித்தது.
துபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலத்தீவுகள் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் தனது போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தும் ஹரக் கட்டா, பல கொலைகள் மற்றும் கொள்ளைகள் மற்றும் நாடுகடந்த போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்ததுடன் குடு சலிந்து 9 கொலைகளை திட்டமிட்டதாகவும் மேலும் நால்வரை காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் ஹரக் கட்டா தப்பியோட முயற்சி செய்த நிலையில் அது குற்றப் புலனாய்வினரால் முறியடிக்கப்பட்டதுடன் ஹரக் கட்டா தப்பி செல்வதற்கு உதவியாக இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தேடப்பட்டுவரும் நிலையில் அவரது தாய் மற்றும் மைத்துனர், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.