இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி!

2019 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, 2014 ஆம் ஆண்டிலிருந்து பிறப்பு வீதத்தில் தொடர்ச்சியான குறைவு காணப்பட்டாலும், இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 2019 மற்றும் 2022 க்கு இடையில் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகள் காட்டுகின்றன.

2023 மற்றும் 2022 இல் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையில் 6,401 குறைவடைந்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதிவரை மொத்தம் 268,920 பிறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 275,321 பிறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டில் 284,848 பிறப்புகள் பதிவாகியுள்ளதுடன் , 2020 இல் 300,000 க்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

2023 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் மொத்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் 41,786 வித்தியாசத்தை பதிவு செய்துள்ளது.

சமூக மற்றும் பொருளாதார தடைகள், பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு காரணங்கள் குழந்தைகளைப் பெறாத மக்களின் முடிவுகளுக்கு பங்களித்துள்ளன என்பதை சமூக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவாக்கு, நாடு முழுவதும் தத்தெடுப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும், இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply