ரணிலுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள்! – கஜேந்திரகுமார் சாட்டை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தற்போது வழங்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுக்குச் செல்வதானது அவரது அரசியலுக்கு முண்டு கொடுப்பதாகவே அமையும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாகவே தமிழ் தரப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்தபோது நாம் எச்சரிக்கை விடுத்தோம். அந்தப் பேச்சக்களில் நாம் பங்கேற்பதை முழுமையாக நிறுத்தியதோடு, அவ்வாறு பங்கேற்பதானது அவருக்கு வழங்குகின்ற அங்கீகாரமாக அமையும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மிகத்துணிவுடன் முக்கியமான விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். விசேடமாக, தன்னால் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியாது என்று கூறியுள்ளார். புதிய பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்வினை வழங்க முடியும் என்று அறிவித்ததோடு, புதிய அரசியலமைப்பின் மூலம் ஒருவருடத்துக்குள் அதனை வழங்க முடியும் என்று கூறியிருக்கின்றார்.

இந்தக் கூற்றுக்களை நம்பி தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களுக்கு செல்வதானது முழுமையாக அவரது அரசியல் நலன்களுக்கு முண்டு கொடுப்பதாகவே அமையும்.

அதனைவிடவும், எவ்விதமான நன்மைகளும் தமிழ் மக்கள் அடையப்போவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக பேச்சுக்குச் செல்வதை எதிர்காலத்தில் முன்னெடுக்க கூடாது என்பதை நாம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply