அஸ்வெசும நன்மைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பயனாளிகள் திட்டத்தின் முதல் கட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சியம்பலாபிட்டிய, முதலில் 2 மில்லியன் குடும்பங்கள் தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதனை மொத்தமாக 2.4 மில்லியன் பயனாளி குடும்பங்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நலன்புரி நன்மைத் திட்டத்தின் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
முதல் கட்டத்தை அமுல்படுத்தும் போது தோன்றிய பிரச்சினைகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் இந்த மீளாய்வின் போது பரிசீலிக்கப்படும் என சேமசிங்க தெரிவித்தார்.