தங்க தட்டு காணாமல் போன விவகாரத்தில் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் கைது!

கதிர்காமம் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டு காணாமல் போனமை தொடர்பில் ருஹுணு கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் சோமிபால டி.ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ரத்நாயக்க டிசம்பர் 27ஆம் திகதி காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக டிசம்பர் 19 அன்று, தேவாலயத்தின் சேமிப்பு அறைக்கு பொறுப்பான பாதுகாவலர் இதே சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் சரணடைந்தார்.

பின்னர் அவரை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் சமர்ப்பித்ததை அடுத்து, இரு காவலர்களையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை,கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இரு பாதுகாவலர்களின் வீடுகளுக்குச் சென்றபோது, ​​அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பு சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறித்த 38 பவுண் தங்கத்தட்டானது இந்தியாவின் கோயம்புத்தூரில் இறந்து கிடந்த அங்கொட லொக்கா என்ற பிரபல கடத்தல் காரரின் மனைவியால் கதிர்காமம் தேவாலயத்திற்கு வழங்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான பாதுகாவலரான சோமிபால ரத்நாயக்கவின் அறைக்குள் தங்கத்தட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

பொருள் காணாமல் போனதை அறிந்ததும், கதிர்காமம் தேவாலய பஸ்நாயக்க நிலமே மூலம் 2021 ஆம்  ஆண்டு முறையான முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.

பின்னர் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply