மழைக்காலங்களில் அதிகளவில் பரவும் “கை வாய் பாதம் நோய்!“ – குழந்தைகளை தாக்குகிறது!

தோல் மருத்துவர் அனுசன் கைலைநாதன் தனது சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்த தகவலை காலத்தின் அவசியம் கருதி வாசகர்களுக்குத் தருகிறோம்.

சில நாட்களாக சிறு குழந்தைகள் கொப்புளிப்பான் போன்ற கொப்புளங்களுடன் சிகிச்சைக்காக வருவதுண்டு. சில வேளைகளில் தவறாக கொப்புளிப்பான் அல்லது நுளம்பு கடிக்கான ஒவ்வாமை போன்று சிகிச்சை பெற்றிருப்பதை காண முடிந்தது.

அது உண்மையில் Hand foot mouth disease எனும் ஓர் வைரஸ் தாக்கமாகும்.

பார்ப்பதற்கு கொப்புளிப்பான் போன்று இருந்தாலும் இது வேறு வகையான வைரஸ் நோயாகும்.

HFMD (Hand Mouth Foot disease) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் . கை வாய் பாதம் நோய் (Hand Mouth Foot disease-HFMD in Tamil) என்பது ஒருவிதமான தொற்று நோயாகும். இந்த வகை தொற்று நோய் பரவுவதற்கு வைரஸ் கிருமிகள்தான் காரணம்.

காக்ஸ்சாக்கி என்னும் வகை வைரஸ்களால் இந்தக் ‘கை வாய் பாத’ நோய் பரவுகிறது.

இந்த வைரஸ்கள் மழைக்காலங்களில் தான் அதிக அளவு பரவி குழந்தைகளைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைகள் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த HFMD வியாதியின் அறிகுறிகள் என்ன?

1. முழங்கை, முழங்கால் மற்றும் பாத அடிப்பகுதிகளில் சிவப்பு கொப்பளங்கள். (கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும். இவை அரிப்பு ஏற்படுத்தாது.)
2. உதட்டின் மேல் கொப்பளம்.
3. காய்ச்சல்
4. தொண்டை வலி

இந்நோயில் இருந்து மீள்வது எப்படி?

இந்த நோய்க்கு என்று தனியாக மருந்து எதுவும் கிடையாது. இந்த வியாதி ஏற்பட்ட முதல் மூன்று நாட்களில் வாயில் புண்கள் காணப்படும். ஐந்து நாட்களுக்குள் படிப்படியாக இந்த புண்கள் மறைந்து வியாதி குறையத் தொடங்கும்.

உடல் தானாகவே இந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படும். தேவையான எதிர்ப்புச் சக்தி உருவான பிறகு உடல் தன்னை நோயில் இருந்து விடுவித்துக் கொள்ளும்.

இந்த வியாதியானது தானாகவே சரியாகி விடும் என்பதால் இதைக் குறித்து மிகவும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

You May Also Like

About the Author: digital

Leave a Reply