ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் தெரிவிப்பு
உலகின் தற்போதைய ‘கொந்தளிப்பான’ சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடா்ந்து, ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இருந்தபோதிலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் நல்லுறவு வலுவாக நீடித்து வருகிறது.
ரஷ்யாவின் படையெடுப்புக்கு இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேநேரம், பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இதுபோன்ற சூழலில், மேற்கண்ட கருத்தை அந்த நாட்டின் அதிபா் புடின் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அதிபா் புடினை மொஸ்கோவில் உள்ள அவரது மாளிகையில் கடந்த புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அது குறித்து ரஷ்ய அதிபரின் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உலகின் தற்போதைய ‘கொந்தளிப்பான’ சூழலுக்கு மத்தியிலும் ஆசியாவில் உள்ள பாரம்பரிய நட்பு நாடுகளுடன் குறிப்பாக இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் பரஸ்பர உறவுகள் நிலையான முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என இந்திய அமைச்சா் ஜெய்சங்கரிடம் அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
‘உக்ரைன் நிலவரம் தொடா்பாக நானும் பிரதமா் மோடியும் பலமுறை பேசியுள்ளோம். சிக்கலான நடைமுறைகளில் அவரது அணுகுமுறை மற்றும் நிலைப்பாட்டை நாங்கள் அறிவோம்.
போா் நிலைமை குறித்து பிரதமா் மோடியிடம் தொடா்ந்து தகவல்களைப் பகிா்ந்துள்ளேன். பிரச்சினைக்கு அமைதியானவழியில் தீா்வுகாண்பதற்குரிய அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நானறிவேன். இது தொடா்பாக மேலும் பேசுவோம். இப்போதைய சூழல் குறித்த கூடுதல் தகவல்களை இந்தியாவுக்கு அளிப்போம்.
எங்களின் ‘நண்பரான’ இந்தியப் பிரதமா் மோடி ரஷ்யாவுக்கு வர வேண்டுமென விரும்புகிறேன். இதன் வாயிலாக தற்போதைய விவகாரங்கள் மற்றும் ரஷ்ய-இந்திய உறவுகளை மேலும் மேம்படுத்தும் வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்க வாய்ப்பு ஏற்படும். எனது அழைப்பை பிரதமா் மோடியிடம் தெரிவியுங்கள். அவரை ரஷ்யாவில் காண ஆவலோடு இருக்கிறேன்.
இருதரப்பு வா்த்தக உறவுகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு வளா்ச்சி கண்டுள்ளன. கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற எரிபொருள் வளங்கள் மட்டுமன்றி உயா் தொழில்நுட்ப துறையிலும் இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன’ என்று புடின் கூறினாா் என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் இருதரப்பு பாரம்பரிய நட்புறவு பேணப்படுமென நம்புவதாகவும் புடின் தெரிவித்துள்ளாா். ரஷ்யாவிலும் அடுத்த ஆண்டு அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பின்போது, அதிபா் இந்தியப் பிரதமா் மோடியின் வாழ்த்துகள் மற்றும் கடிதத்தை அவரிடம் அமைச்சர் ஜெய்சங்கா் அளித்தாா். அக்கடிதத்தில், இந்திய – ரஷ்ய ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இந்தியப் பிரதமா் மோடி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.
இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 50 பில்லியன் டொலா்களை எட்டியிருப்பதாக ரஷ்ய அதிபா் புடினிடம் இந்திய அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்ததாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்த போதிலும், அந்நாட்டிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (04)