ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் யோசனை நடைமுறைக்கு மாறானது!

தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதன் மூலம் பயன்கள் அதிகம் என்கிறார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் யோசனை நடைமுறைக்கு மாறானது. புலிகள் இருந்தபோது, ஒரு புறக்கணிப்பின் வெற்றியை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. இப்போது வடக்கு, கிழக்கில் இராணுவம் சர்வ சாதாரணமாக உள்ளது. புறக்கணிப்பின் வெற்றியை கஜன் எவ்வாறு உறுதி செய்வார்?

இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான நடவடிக்கை என்றும் அந்தத் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் மட்டக்களப்பில் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் கேள்வி பதில் வடிவத்தில் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கள தேசிய கட்சிகளுக்கு நெருக்கமாக இங்குள்ள கட்சிகளும் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த தமிழர்களும் வாக்களிக்கச் செல்வதை ஒருபோதும் தடுக்க முடியாது. புறக்கணிப்பை பரிந்துரைப்பதன் மூலம் கஜன் ஒரு சிங்கள வேட்பாளருக்கு ஆதரவு வழங்க விரும்புகிறாரா?
ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் பல தவறுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் பின்னணியில் புறக்கணிப்பு நடந்தால் என்ன செய்ய முடியாது? வாக்காளர்கள் வீட்டில் இருக்கும்போதே அவர்களின் வாக்குகள் பதிவாகும்.

தேர்தலின்போது தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் நடைபெறுவதை புறக்கணிப்பு உறுதி செய்யாது. புறக்கணிப்பினால் மிக மோசான (குறைவான) வாக்குப் பதிவே இடம்பெற்றதாகச் செய்தித்தாள்கள் தெரிவிக்கும் அல்லது மத்திய அரசு அதன் இராணுவம் உள்ளிட்ட தனக்கு நெருக்கமான தரப்புக்கள் ஊடாக மிகச் சிறந்த முறையில் செயற்பட்டால், தமிழர்கள் வீடுகளில் தங்கியிருந்து புறக்கணிக்கப்பதாக அறிவிக்கப்பட்டபோது கணிசமான வாக்குப்பதிவு நடந்ததாகச் செய்தித் தாள்கள் மறுநாள் கூறும்.

மறுபுறம், பொன்னம்பலம் போன்ற மூன்று மொழிகளையும் அறிந்த ஒரு பொது தமிழ் வேட்பாளரால் தமிழர்களுக்கு அளப்பரிய சேவைகளைச் செய்ய முடியும். வாக்காளர்களிடையே ஆள்மாறாட்டம் குறைக்கப்படலாம். தேர்தலில் வாக்காளர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பை உறுதிசெய்து, அதனை அதிகரிக்கலாம். தமிழர்களின் சோதனைகள் மற்றும் இன்னல்களை வெளிப்படுத்துவதற்கான மேடைகள் கிடைக்கப்பெறும். அதேவேளையில், வாக்காளர்கள் மத்தியில் நமது அரசியல் நிலைப்பாடு பற்றிய கூடுதல் புரிதலை உறுதி செய்ய முடியும்.

ஜனாதிபதித் தேர்தலில் பங்குபெறும் பொது வேட்பாளர் மூன்று மொழிகளையும் அறிந்திருப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நேரத்தைப் பயன்படுத்துவதாகும். இன்று சிங்கள மொழிப் பத்திரிக்கைகளோ ஊடகங்களோ தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கின் பிரச்சினைகளையோ கருத்துக்களையோ வெளியிடுவதில்லை. ஆங்கிலப் பத்திரிக்கைகள் கூட எங்களின் பிரச்சனைகளை மிகவும் கஞ்சத்தனமாகவே செய்தியாக்குகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொலைக்காட்சி நேரத்தை தமிழ் பொது வேட்பாளர் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன் மூலம் சிங்களவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் எமது பிரச்சினைகளை தெளிவுபடுத்த முடியும். இங்குள்ள இராஜதந்திர தூதரகங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடம்கூட வடக்கு மற்றும் கிழக்கின் களநிலமை பற்றிக் கூற முடியும்.

இறுதியாக எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறுவதை பொதுத் தமிழ் வேட்பாளரால் தடுக்க முடியும். தமிழ் வேட்பாளருக்கு சிங்களவர்கள் பலரும்கூட தமது விருப்பு வாக்குகளை வழங்கலாம்.

எனவே எமது பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைக்க ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கடைசியாக கஜன் பொது தமிழ் வேட்பாளராக போட்டியிட விரும்பினால் எனது வாக்கு அவருக்கே செல்லும்! ஆனால், தமிழர்களின் பிரச்சனைகள் பற்றி எமது சிங்கள சகோதரர்களுக்குப் புரியவைக்கும் வகையில் அவர் தொலைக்காட்சி உரை ஒன்றை சிங்களத்தில் வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply