முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்யத் தவறியதை அடுத்து, நாளைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ரம்புக்வெல்லவின் வெளிநாட்டுப் பயணங்களும் நீதவானின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சுகாதார அமைச்சர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவிருந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கு விசாரணை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டமை காரணமாக அவர் ஆஜராகவில்லை.
இதேவேளை, ரம்புக்வெல்ல தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறொரு திகதியை நிர்ணயம் செய்யுமாறு எழுத்து மூலம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தநிலையில், தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று நேற்றையதினம் குற்றப் புலனாய்வு திணைக்கள வளாகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பத்து செயற்பாட்டாளர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.