இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் கைது
400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பொதிகளுடன் இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக வந்த பாரவூர்தியை பொலிஸார் மடக்கி சோதனை நடத்தியபோது அதில் 406.2 கிலோ எடையுடைய மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டியவரான கோமல்பிரீத் சித்து கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது.
இந்த போதைப்பொருளானது மிகப்பெரிய சூட்கேஸ்களில் அடுக்கி பாரவூர்திக்குள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு 5.1 கோடி கனடா டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கனடா எல்லைச் சேவை முகமையின் மண்டல பொது இயக்குநர் ஜனாலி பெல்-பாய்சுக் கூறும்போது, கடந்த ஜனவரி 14 ஆம் திகதி எல்லைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த போதைப்பொருட்களை கைப்பற்றினோம். கனடாவில் பிடிபட்ட மிகப்பெரிய அளவிலானபோதைப்பொருள் அளவு இதுவாகும்.
இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளானது மூளையை தூண்டி உற்சாகமான மனநிலையை கொடுக்கும். அதேவேளையில் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த போதைப்பொருளாகும். இது பசியின்மையை ஏற்படுத்தும் திறன் கொண்டது. வெள்ளை நிறத்தில் மணமற்றதாக இருக்கும் மெத்தம்பெட்டமைன் தண்ணீர் மற்றும் அல்கஹோலில் எளிதில் கரையும். இதை மாத்திரையாகவும், தூளாகவும் போதைக்குப் பயன்படுத்துகின்றனர்.
கைதான 29 வயது கோமல்பிரீத் சித்து, கனடாவின் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்தவர். இந்த பாரவூர்தி, அமெரிக்காவில் இருந்து மானிடோபா மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தது, என்று குறிப்பிட்டுள்ளார். (04)