ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது வட்டுக்கோட்டை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாகவும் , அடி தாங்க முடியாமல் தப்பியோடி வந்த மாணவன் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்க்கவும் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இன்று காலை மேற்படி மாணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.
குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதுடன் மாணவனின் உடலில் பொலிஸார் தாக்கியதற்கான தடயங்கள் எதுவும் இல்லை எனவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் நேற்றுக் காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு செய்த பின்னர் பொலிஸாருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.