சிலி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

தென்னமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு, அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரை விசிறி தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

இந்தக் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் ஹெக்டெயர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி மடிந்தன. அதனை சுற்றியுள்ள எஸ்ட்ரெல்லா, நவிடாப் ஆகிய பகுதிகளுக்கும் இந்த தீ பரவியது. இதில் அங்குள்ள மூவாயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின.

இந்தநிலையில் சிலியில் எரியும் காட்டுத் தீயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் நிலை என்னவென்று தெரியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேகமாக பரவி வரும் இந்தத் தீயை அணைப்பது சவாலாக உள்ளது என்றும் பல உடல்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும், அடையாளம் காண்பது கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடயவியல் துறை அலுவலர்கள், காணாமல்போன தமது உறவினர்களைப் பற்றிப் புகாரளித்த நபர்களிடமிருந்து மரபணுப் பொருட்களின் மாதிரிகளை எடுப்பார்கள் என்றும் அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினருக்கு உதவுமாறு பொதுமக்களை அந்நாட்டு அதிபர் கப்ரியல் போரிக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத்தீ காரணமாக இனிவரும் நாட்களில் வெப்பநிலை 104 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply