1897 ஆம் ஆண்டில் நயினாதீவில் ஆறுமுகம் பார்வதி தம்பதிகளிற்கு திருவருளும் குருவருளும் கைகூடி வர ஆறாவது பிள்ளையாக அவதரித்து ‘முத்துக்குமார்’ எனும் பிள்ளைப்பெயர் கொண்டவரே பிற்காலத்தில் ஈழத்துச்சித்தர் வரிசையில் வைத்துப்போற்றப்படும் ‘நயினைச் சித்தர் தவத்திரு முத்துக்குமார சுவாமிகள்’ ஆவார்.
இவர் தனது இளமைக்கல்வியை நயினாதீவு தில்லையம்பல வித்தியாசாலையில் பெற்றுக்கொண்டதுடன் வாலிப வயதில் ஏனையவர்களைப் போலவே தொழில் நிமித்தமாக கொழும்பு சென்றார். அங்கு தன் தமையனாரின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இதன்போது 1915ம் ஆண்டு ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரத்தினை கண்ணெதிரே கண்டு மனிதப்பிறவியின் நிலையாமையை உணர்ந்தார். மனிதப்பிறப்பின் நோக்கத்தை அறிய நாட்டமுற்றார். இவருக்கு இந்தியாவிலிருந்து வந்து கொழும்பில் தங்கிச்செல்லும் இந்திய சந்நியாசிகள் வழிகாட்டியாயினர்.
அக்காலத்தில் கொழும்பு முகத்துவார பகுதியில் வசித்த ‘ஆனைக்குட்டி சுவாமிகளும்’ இவரது ஆத்மீக தேடலுக்கு விடையானார். இவ்வாறே இந்திய கடப்பையூர் சுவாமிகள் ஒருவருக்கு முத்துக்குமார் அடியவராகி அவருடனே கதிர்காம யாத்திரை சென்றபோது வழியில் அவரிடம் தீட்சையும் பெற்றுக்கொண்டார். ஆனால் இதன்பின்பு அச்சுவாமிகள் எவரும் அறியாது சென்றுவிடவே, தாயைத் தொலைத்த கன்றுபோல் ஏங்கினார் முத்துக்குமார். அவரைத்தேடி எங்கும் காணாது ஈற்றில் கைத்துண்டு கவிதையை வைத்துவிட்டு காணாமற் போனார் முத்துக்குமார்.
1933ம் ஆண்டில் நடைபெற்ற நயினை அம்பாளின் வருடாந்த மகோற்சவத்தில் நீண்ட சடையும் காவி உடையுமாக தோன்றிய சுவாமிகளை தம் ஊரார், சுற்றத்தார் இன்னாரென கண்டுகொள்ள நீண்ட நாட்களாகியது. இருப்பினும் உறவுகள் வருந்தி அழைத்தும் எவரிடமும் அண்டாது உறவெல்லாம் துறந்து துறவியாராக அங்குள்ள ஆலயங்களிலும் மடங்களிலும் தங்கிவந்ததுடன் பின்னாளில் தமது யாழ்ப்பாண அன்பர்களில் ஒருவரது சிவலிங்கப்புளியடி இல்லத்தில் தங்கிச்செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார.
இக்காலத்தில் இணுவில் பரமானந்தவல்லி ஆச்சிரமத்தில் ‘வடிவேற்சுவாமி’ எனும் அன்பருடன் தங்கியிருந்து அவ்வாலயத்தின் குடமுழுக்கினை செந்தமிழ் ஆகமத்தால் நடாத்திவைத்ததுடன் இணுவில் பெரிய சன்னியாசியாரின் மறைவுக்குப்பின் சிதிலமுற்று புதர்மண்டிப்போன இணுவில் காரைக்கால் சிவன் கோவிலை மீளப்புனரமைக்க காரணகர்த்தாவாக அமைந்தார்.
இக்காலத்தில் தனது தலயாத்திரைகளின் போது மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை நகுலேச்சரம், கும்பிளாவளை பிள்ளையார் கோவில், திக்கம் கந்தவனம் சுப்பிரமணியர் கோவில், வண்ணார்பண்ணைச் சிவன்கோவில், காட்டுத்துறை அம்பலவாணப் பிள்ளையார், காட்டுத்துறை மகாமாரி அம்மன் கோவில், நல்லூர் முருகன் மற்றும் நயினைப்பதி கோவில்கள் தோறும் சென்று வழிபட்டு அக்கோவில் மூலமூர்த்திகள் மீது அன்பு ததும்பும் பாசுரங்களைப் பாடியுள்ளார்.
மேலும் நயினை அம்பாளின் மீது கொண்ட தீராக்காதலால் நாகேஸ்வரி தோத்திர மாலை, நாகபூசணி அந்தாதி என்பனவும் சிவனின் பெருமை கூறும் நமச்சிவாய மாலை சைவசித்தாந்த விளக்கமாக உண்மை அறிவிளக்கம் என்பவற்றையும் பாடியருளியுள்ளார்.
இந்நாட்களில் சுவாமிகளின் பெருமை யாழ்ப்பாணத்தவர்களால் உணரப்பட்டு அவரைச்சுற்றி மெய்யன்பர்களின் கூட்டம் பெருகியது. அன்பர்கள் வேண்டி அழைத்தபோது அவர்தம் இல்லமேகி தன்னுடன் கூடவே வைத்திருக்கும் இறை விக்கிரகங்களை பூக்களால் அர்ச்சித்து அவ்வூரவர்களையும் அழைத்து பூசை வழிபாடாற்றி, வேண்டும் அடியவரின் உடற்பிணி, மனக்குறை நீக்கி வேண்டியன கிடைக்கப்பெற்று அவர்களை இறை சிந்தனையின்பால் நிலைபெறச் செய்தார்.
அமுதசுரபியாம் நயினாதீவு அம்மனின் வருடாந்த மகோற்சவத்தை நாடிவரும் பக்தர்களின் பசிக்களை நீக்கி அம்பாளை தரிசிக்கவேண்டி அன்னதான திருப்பணிக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் யாழ்ப்பாண அன்பர்கள் மூலமாக உற்சவ காலத்திற்கு முன்பே சேகரித்து ஊருக்கு அனுப்பி அன்னதான கைங்கரியத்தை முன்னின்று நடாத்தினார். இன்றும் அங்கு தினமும் நடைபெறும் அமுதசுரபி அன்னதான சபையின் நிகழ்விற்கு அடித்தளமிட்டவர் எமது முத்துக்குமார சுவாமிகளே ஆவார்.
அவ்வாறே மகோற்சவ இறுதிநாளான தீர்த்தோற்சவ நிகழ்வில் அம்பாள் எழுந்தருளி தீர்த்தமாடவென ‘கங்காதரணி’ திருக்குளத்தினை ஊரின் தென்மேற்கு பகுதியில் தனது மேற்பார்வையில் வெட்டுவித்ததுடன் பின்னாட்களில் தனது அடியவரான கரம்பன் க. தம்பையாவின் கனவிற்தோன்றி இரத்தினக்கல் ஒன்றிருக்குமிடத்தை தெரிவித்து அதைவிற்று கற்கேணியாக கட்டப்பணித்து அதனை ஒப்பேற்றியவரும் சுவாமிகளே.
ஒருநாள் சுவாமிகள் வண்ணார் பண்ணையில் தங்கியிருந்த காலத்தில் காங்கேசன்துறை வீதியால் நடந்து வந்துகொண்டிருந்தபோது சிவதொண்டன் நிலையத்தில் இருந்து தனது சிஷ்யரான செல்லத்துரை சுவாமிகளுடன் வெளிப்பட்ட யோகர் சுவாமிகள் எதிரே வருவது முத்துக்குமார சுவாமிகள் என்பதை கண்டதும் ‘பெரியவர் வருகிறார், நாங்கள் சற்று வழிவிட்டு ஒதுங்கி நிற்போம்’ என தமக்கு கூறியதுடன், இருவரும் ஓரமாக நின்றதாக செல்லத்துரை சுவாமிகளே பிற்காலத்தில் தனது அன்பர் ஒருவருக்கு கூறியுள்ளார்.
இவ்வாறு சமகால ஞானிகளால் மதிக்கப்பட்ட பெருமைக்குரிய முத்துக்குமார சுவாமிகள் அக்கால ஏனைய ஆன்மீகத் தலைவர்களுடன் ஆத்மீகத் தொடர்புகளையும் பேணியுள்ளார். தனது காலத்தில் கந்தர்மடம் வேதாந்தமடத்தில் குருமுதல்வராக இருந்த மகாதேவ சுவாமிகளுடன் நட்பு கொண்டிருந்ததுடன் காலத்திற்கு காலம் அங்கு சென்றுவருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதன்போது அங்கு ஆச்சிரமத் தொண்டராகவும் இணுவில் பரமானந்தவல்லி ஆலயபரிபாலகராகவும் பிற்காலத்தில் கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரம நிறுவுனராகவும் விளங்கியவர் வடிவேற்சுவாமிகள். இவரே முத்துச்சுவாமிகள் மகாசமாதியுற்ற போது அவரது சமாதியை நயினாதீவில் நிறுவி திருநிலைப்படுத்தினார்.
சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டவர்களில் முதன்மையானவர் யாழ்ப்பாணம் அறிந்த ‘குடையிற்சுவாமிகள்’ ஆவார். இவர் 1936ம் ஆண்டு கந்தையா எனும் நாமத்துடன் இளைஞராக இருந்தபோது வடிவேற்சுவாமிகளுடன் நயினாதீவு சென்று அங்கு சுவாமிகளால் அமைக்கப்பட்ட கங்காதரணி திருக்குளத்தில் நீராடி முத்துச்சுவாமிகளின் பாதம் பணிந்து எனக்கும் வழிகாட்ட வேண்டும் எனவேண்டி நின்றார். இவ்வாறு அருளாசிபெற்ற கந்தையாவே பின்னாளில் பார்போற்றும் குடைச்சுவாமிகள் ஆனார்.
சுவாமிகளிடம் கொழும்பில் இருந்துவந்து நயினாதீவில் அருளாசிபெற்ற இராமச்சந்திரா எனும் இளைஞரே சுவாமிகளால் இந்தியாவில் ரமணமகரிஷியிடம் சிஷ்யராக அனுப்பப்பெற்றதுடன் இவரே பின்னாளில் கொழும்பு இல்லறஞானி இராமச்சந்திரா சுவாமிகள் எனப்பெயர் பெற்றார். முத்துச்சுவாமிகளிடத்தில் அளவற்ற அன்புகொண்டு அவர் இருக்குமிடமெல்லாம் தேடிச்சென்று தரிசித்ததாக 1958 இல் வெளிவந்த ஆத்மஜோதி விசேடமலரில் ஈழத்துச்சித்தர்கள் எனும் நூலில் சிறப்பித்துள்ளார் ஆத்மஜோதி முத்தையா அவர்கள்.
இவ்வாறு இந்தியாவின் திருவண்ணாமலையில் ரமணமகரிஷியுடன் தங்கி தன்னை புடம்போட்ட பொன்னாக மெருகேற்றி மீண்டும் தாய்நாடு வந்து தனது பிறப்பிடத்திற்கும், சைவம் தழைக்கும் யாழ் மண்ணிற்கும் சைவநெறி ஓங்க அரும்பணியாற்றி வாழ்ந்த சுவாமிகள் 1948ம் ஆண்டில் நயினைத்தாயின் மகோற்சவம் முடித்து யாழ் வந்து வண்ணார்பண்ணையில் தன் அன்பர் கந்தப்பசேகரர் வீட்டில் தங்கியிருக்கும் போது அழியவேண்டிய தன்னுடலை அழிக்க நோயை வரவழைத்துக்கொண்டார்.
நோயைப் பாராது சிவசிந்தனையில் திளைத்திருந்த போது தமது அன்பர்களின் நிர்ப்பந்தத்தால் மருத்துவத்தை ஏற்றாலும் தான் சமாதியுறும் காலம், சமாதிவைக்கும் இடம், வைக்கும் முறை, அதற்கு பொறுப்பானவர் என்பவற்றை முற்கூட்டியே தெரியப்படுத்தி அதன்படியே 1949ம் ஆண்டு தை மாதம் 26ம் திகதி பிரதோச காலமும் பூராட நட்சத்திரமும் கூடிய நள்ளிரவுப் பொழுதில் அடியவர்கள் பார்த்திருக்க பத்மாசனமிட்டு நிஷ்டையில் இருந்தவாறே சிவஜோதியுடன் இரண்டறக்கலந்து பரிபூரணமடைந்தார்.
சுவாமிகளின் ஸ்தூல சரீரம் நயினாதீவு காட்டுகந்தசுவாமி கோவிலின் பின்புறமாக சமாதி வைக்கப்பட்டு அதன்மேல் சுவாமிகளால் பூசிக்கப் பெற்றுவந்த சிவ பார்வதி விக்கிரகங்களுடன் முருகன் சிலையும் சேர்க்கப்பட்டு சோமஸ்கந்த ஈஸ்வரம் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் அருகில் சுவாமிகளின் அடியவர் கரம்பன் தம்பையா அவர்களால் 1957ம் ஆண்டு அருள் ஒளி நிலையம் எனும் மடமும் கட்டப்பட்டு, இந்திய பலப்பை சித்திரமுத்து அடிகளால் திறந்துவைக்கப்பட்டது.
இன்று நயினைச்சித்தர் பரிபூரணமடைந்த 75ஆம் ஆண்டு நிறைவு குருபூசைத்தினம் சுவாமிகளது சமாதி ஆலயத்தில் சிறப்புற நடைபெறுகின்றது. இதன்பொருட்டு அவரது வரலாறு மற்றும் அவரால் பாடப்பெற்ற பதிகங்கள் அடங்கிய ‘நயினை ஞானமுத்து’ மலர் வெளியிடப்படுவதுடன் அப்பாடல்களை இசையுடன் கூடிய ‘முத்துக்குமார நாதம்’ இறுவட்டாகவும் வெளியிடப்படுகின்றது.
சற்குருவே துணை.