சந்நிதியில் விற்ற குளிர்களியில் தவளை – விற்பனையாளருக்கு 5000 ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளது

கடந்த புதன்கிழமை ஆலயச் சூழலில் குளிர்களி விற்பனையில் ஈடுபட்டவரிடம், அதனை வாங்கிய நபர் ஒருவரின் குளிர்களிக்குள் தவளை ஒன்று காணப்பட்டது.

அது தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை சுகாதாரப் பரிசோதகர், ஐஸ் கிறீம் விற்றவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குளிர்களியை விற்பனை செய்தவர், குளிர்களியில் தவளை இருந்ததை ஒப்புக்கொள்வதாகவும், சுன்னாகம் பகுதியில் இயங்கும் குளிர்களி தயாரிப்பு நிறுவனத்திடம் கொள்வனவு செய்தே ஆலயச் சூழலில் தான் விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து விற்பனை செய்தவருக்கு 5,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இதேவேளை சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் நடாத்திச் செல்லப்பட்ட உணவகம் ஒன்றிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளருக்கு 36,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்நிதி ஆலயத்திற்குத் தினமும் வழிபாட்டிற்காகவும், சந்நிதி ஆலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுகளுக்காகவும் பல நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர்.

அவர்கள் ஆலயச் சூழலில் உள்ள உணவகங்களில் சிற்றுண்டிகள், குளிர்பானங்களைக் கொள்வனவு செய்கிறனர். அதனால், ஆலயச் சூழலில் உள்ள உணவகங்கள் மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களின் சுகாதாரத்தை சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply