மன்னார்த்தீவில் அதானியின் காற்றாலை மின் நிலையத்தினால்
மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் உயிரிழக்கும் அபாயம்!
பறவையியல் துறை ஆராய்ச்சியாளர் சம்பத் செனவிரத்ன எச்சரிக்கை
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்திய அதானி நிறுவனத்தினால் மன்னார்த் தீவில் அமைக்கப்படவுள்ள 250 மெகாவோட் காற்றாலை மின் நிலையத்தினால் வருடம் தோறும் 30 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகின்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் பாரிய உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடிய கொடிய சூழ்நிலை ஏற்படக்கூடும், என பறவையியல்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பறவைகளில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடங்குகின்றன எனவும், இந்தப் பிரமாண்டமான காற்றாலை மின் நிலைய அமைப்பை பறவைகளுக்கான தடுப்பாகக் கட்டுவதை நிறுத்திவிட்டு, மேலும் வடக்கே நோக்கி நகர்த்தி அதை அமைப்பதற்கு அறிவியல் பூர்வமான முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல்துறையின் பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளரான பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தலைமையிலான குழுவினர் ஜிபிஎஸ் – ஜிஎஸ்எம் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி பல வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வின்படி, இலங்கைக்கு வருகை தந்து மன்னார்ப் பகுதியில் பறவைகள் பறந்து திரியும் பகுதியிலேயே காற்றாலையானது அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையினால், ‘குறித்த காற்றாலை அமைப்பானது உலகம் முழுவதிலுமிருந்து இலங்கைக்கு வருகின்ற மில்லியன் கணக்கான பறவைகளுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்துவது உறுதி’ என பேராசிரியர் சம்பத் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சிலர் தரிசு நிலமாக – தவறாக எடைபோடும் மன்னார் தீவுப் பகுதியானது, உலகின் இடம்பெயர்ந்து வரும் பறவைகளின் பாதையான மத்திய ஆசியப் பாதையின் மையப் பிரதேசமாக அமைந்துள்ள முக்கியத்துவமிக்க ஓர் இடமாகும்.
இப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பறவைகள் குறித்து நாம் நீண்ட நாட்களாக ஆய்வு செய்து வருகின்றோம். உண்மையில், குளிர் காலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் இங்கு வருகின்றன. இதற்கமைய, நூற்றாண்டு காலமாக இலங்கைக்கும் சர்வதேசத்திற்குமிடையே பிரிக்க முடியாத ஓர் உயிரியல் உறவு உள்ளமை நிரூபணமாகியுள்ளது.
ஆகவே, இந்த உயிரியல் பிணைப்பு உட்பட, எண்ணிலடங்கா பறவைகளின் உயிர்களும் கூட குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலைய அமைப்பால் இழக்கப்படவுள்ளன. எனவே, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் மக்கள் கருத்துக் கணிப்பிற்கு இந்நாட்டின் சுற்றாடல் ஆர்வலர்கள் கூடிய விரைவில் தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். (ரெப-39)
