கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்கள் – விபரங்கள் வெளியாகின!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்கள்
1994 முதல் 1996 வரையான காலப் பகுதிக்குரியவை

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்,

“ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், அது தொடர்பில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்குப் பிற்படாததுமான காலப்பகுதியைக் கொண்டிருக்கலாம் எனப் பல பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது ஓர் இடைக்கால அறிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.

எஞ்சிய எலும்புக்கூட்டுத் தொகுதியை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அநேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மருத்துவர்களின் அறிக்கையில் மனித எச்சங்களின் வயது, பால், இறப்புக்கான காரணம் போன்றவை குறிப்பிடப்படவில்லை.” – என்றார். (அ)

 

You May Also Like

About the Author: SK Thana

Leave a Reply