தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 88 உயிரினங்களுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதியரின் காற்று நுழையும் வகையிலான பெட்டிகளில் தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லி, எலி, மற்றும் பிற வகை புழுக்கள் ஆகிய உயிரினங்களை அடைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பேங்கொக்கில் உள்ள விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது சுங்க அதிகாரிகளோ இந்த உயிருள்ள விலங்குகளை அவதானிக்காதது பிரச்சினையாக உள்ளதென கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தம்பதியினர் சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடையும் வரை கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளை கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.