முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பதவி வகிப்பதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் இந்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைவர் பதவியில் தொடர்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சில தினங்கள் முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகிய வண்ண மற்றும் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
கட்சித் தலைமையகத்தில் கடந்த மார்ச் 30 ஆம் திகதி அன்று செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மகியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு குறித்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல், அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து அவர்களை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தது.