நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுடன் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கிய சஜித்!

சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது, என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் மாதம் பூராவும் நோன்பு நோற்று பின்னர் ரமழான் மாதத்தின் தலைப்பிறை கண்டதும் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் இஸ்லாமிய மத நாட்காட்டியில் மிக முக்கியமான விழாவாகும்.

ரமழான் என்பது இஸ்லாத்தின் ஆன்மீகம் மட்டுமன்றி மனித மற்றும் சமூக விழுமியங்களை அங்கீகரிக்கின்ற அதனை பறைசாற்ற கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

மாதம் பூராவும் நோன்பின் சிறப்பைப் பேணி ரமழான் மாதத்தின் தலைப்பிறை கண்டதும் கொண்டாடப்படுகின்ற இந்த புனிதப் பெருநாளை, உலகிற்கு தர்மம் மற்றும் சமத்துவச் செய்தியை எடுத்துரைக்கும் மிக முக்கியமான சமய விழா என்றும் அழைக்கலாம்.

இலங்கை வாழ் சமூகத்துடன் பண்டைய காலம் தொட்டு இஸ்லாமியர்கள் நெருங்கிய சகோதரத்துவத்துடன் பேணிய உறவு உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இந்தத் தேர்தல் ஆண்டில் சகோதரத்துவ பந்தத்தை பலவீனப்படுத்த பல்வேறுபட்ட இனவாதிகள் முயற்சிக்கலாம். ஆனால், அந்த சகோதரத்துவத்தை தொடர்ந்தும் சேதப்படுத்த ஒரு சிறிய இனவாதக் குழுவுக்கும் நாம் இடமளித்தல் கூடாது.

மக்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டத்தின் போது இந்த சகோதரத்துவத்தின் கரங்கள் நாட்டுக்காக நீட்டப்பட்டதைக் கண்டோம்.

சிங்கள, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் என எந்த இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஒரு தாயின் பிள்ளைகளாக ஒரே தேசமாக நம் நாட்டிற்காக முன்னோக்கி வந்தோம். இந்த மகத்தான ஈதுல் பித்ர் பெருநாள் தினத்தன்று அந்த சகோதரத்துவத்தின் கரங்கள் எதிர்காலத்தில் வலுப்பெற வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

அதன் மூலம் வங்குரோத்தாகியுள்ள நமது நாட்டை உலகின் முதல் நிலை நாடாக மாற்றத் தேவையான பலத்தை பெற எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கையர்கள் போலவே உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் அமைதியான, நல்லிணக்கம் கொண்ட சகோதரத்துவம் வாய்ந்த ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply