ஜனாதிபதி வெளிநாட்டு பாடசாலைகளை ஆரம்பிப்பதைவிட இலங்கையில் வளங்கள் இன்றி தவிக்கும் பாடசாலைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 5161 பாடசாலைகளும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3000 பாடசாலைகளும் நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல பாடசாலைகள் வளப்பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்த அவர், அதிகாரிகளின் அலட்சியத்தால் கிராமப்புற பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 70,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அவர், மேல் மாகாணத்தில் மாத்திரம் 7000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களின் விலை பெற்றோர்களால் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், கல்விச் செலவிலிருந்து பெற்றோரை விடுவிக்க ஜனாதிபதியும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாடசாலைகளில் பெற்றோர்களிடமிருந்து குடிநீர் கட்டணத்தை வசூலிக்க சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக அதிபர்கள் பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.