தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பேச்சுவார்த்தைக்கு வருகை தராத முதலாளிமார் சம்மேளனம்! விமர்சித்த செந்தில் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு  இ.தொ.கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார் சம்மேளனம் வருகை தராது தங்களது அழற்சிய போக்கை வெளிப்படுத்தியுள்ளமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடுமையாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக  தீர்வு எட்டப்படும் நிலையில், முதலாளிமார் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு வருகை தராது அசமந்த போக்கில் செயற்பட்டு வருகிறது.

தோட்ட தொழிலாளர்களின் விடயத்தில் உரிய தீர்வு கிடைகாவிடின் இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் என முதலாளிமார் சம்மேளனத்திற்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கையும்  விடுத்துள்ளார்.

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம்  அலட்சிய போக்கை  கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இதனால்தான் இ.தொ.கா இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கின்றது.

இவர்களுக்கு ஒரு சதவீதமேனும் சம்பள அதிகரிப்பு வழங்குவதில் உடன்பாடு இல்லை. எனவே தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இ.தொ.கா  முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்க தயாராகி வருகிறது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply