கைபேசி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் 63 வீதமானவர்கள் பெண்கள் எனத் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 23 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையும் அதற்கு சரிசமமாக 23 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் வீட்டின் பிரதான குடியிருப்பாளரிடம் மட்டுமே கைபேசி பாவனை இருந்ததாகவும், தற்போது அது கணவன்-மனைவி, குழந்தைகள் என முழு குடும்பத்தினரின் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், கடந்த மூன்று மாதங்களில், கணினி குற்றங்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 1500 ஐ எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரகசியப் பொலிஸாரின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கண்டி, மாத்தறை, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள உள்ளூர் புலனாய்வுப் பிரிவுகளும் இனந்தெரியாத நபர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.