யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன் எங்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இலங்கையில் மிக நீண்ட காலமாகப் பட்டதாரிகளுக்கான வேலையில்லாப் பிரச்சினை நிலவி வரும் சூழலில் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கையின் கல்வித் திட்டத்தின் கீழ் 20 வருடங்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறுவோர் பின்னர் சாதாரண கூலித் தொழிலுக்கே சென்று வாழ்வாதாரத்தை மேற்கொள்ள வேண்டிய மனச்சங்கடமான நிலையையே எதிர்கொள்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் தமது எதிர்காலக் கனவுக்காகப் படித்து பட்டதாரிகளாகி இன்று எவ்விதத்திலும் பயனற்றவர்களாக வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற பெயரோடு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான எமது அவல நிலைமை எதிர்கால மாணவர்களுக்கும் கல்வி மீதான விரக்தியையும் பட்டப்படிப்பு மீதான அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் கல்வி அறிவு மற்றும் வளர்ச்சியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றை அறிந்தும் அறியாமலும் உள்ள அரசின் அசமந்தபோக்கானது நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய கல்வி கற்ற இளைஞர்களைப் பயந்தவர்களாக வாழ வைத்துள்ளது.

இதன் விரக்தியாலும் மன அழுத்தத்தாலும் நாடு தழுவிய ரீதியில் பட்டதாரிகள் அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வடக்கு மாகாணப் பட்டதாரிகளாகிய நாமும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பை மேற்கொள்ளவுள்ளோம்.

1. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் போட்டிப் பரீட்சைகள் நிராகரிப்பு செய்யப்பட வேண்டும்.

2. ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மீண்டும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வருதல் நியாயமற்றது. அது வேலையற்ற பட்டதாரிகளைப் பாதிக்கின்றது.

3. வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடைய பட்டதாரிகளின் வாழ்வியல் தொடர்பான அரசின் கரிசனை என்ன?

4. வேலையற்ற பட்டதாரிகளும் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்களும் சவால்களும் அதன் ஊடாக ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்து அரசின் நிலைப்பாடுகள் என்ன ?

இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாது ஜனநாயக முறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து நமது கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜரை ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பதுடன் வடக்கு மாகணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்குமான மகஜர் கையளிப்பு இடம்பெறவிருப்பதால் வடக்கு மாகாண பட்டதாரிகள் உங்கள்  நேரங்களை  ஒதுக்கி  இம் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் காலை 9 மணியளவில் “நமக்காய் நாமே” என்னும் தொனிப்பொருளில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் அதில் கலந்துகொள்ளுங்கள்” – என்றனர்.

இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தெளிவுபடுத்தலுக்கு 0773539992 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply