டீல் போடும் அரசியலுக்கு அடிபணியாமல் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எந்தவொரு சக்திக்கும் சரணடையாமல் செயற்பட்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொணர வருங்கால ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் செயற்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்; “நான் ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டேன் என சிலர் கூறுகின்றனர். நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று உறுதியாக கூறுகின்றேன். நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறுகின்றவர்கள் எனக்கெதிராக ஏதேனும் சதித் திட்டம் தீட்டியுள்ளனரோ தெரியவில்லை. நினைவில் கொள்ளுங்கள், நான் மரணத்திற்கு பயப்படுபவனல்ல. காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கூட என்னை கொலை செய்ய முயன்றனர். அவர்களுக்கு நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் கோழைகள் அல்ல, என் தந்தையும் மரணத்திற்கு அஞ்சியவரல்ல. அதனால் என்னுடன் அனாவசியமான கொடுக்கல் வாங்கல் செய்ய எவரும் முன்வராதீர்கள், அத்தகைய எண்ணத்துடன் டீல் போட வராதீர்கள். எனக்கு எனது மக்களுடன் தான் டீல் உள்ளது என கூற விரும்புகின்றேன்” என்றார்.