ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபில என்பவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய குறித்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹேஷ், 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களும், 15 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பணத்தை வைத்திருந்த 45 வயது ஆண் மற்றும் 51 வயது பெண் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட காரையும் விசேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்றனர்.
குறித்த நபர், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வீட்டில் சுமார் 2 வருடங்களாக பாரியளவில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி இந்த போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் எழுத்தாளர் ஒருவர், 1 கிலோ 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 49 இலட்சம் ரூபா பணத்துடன் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர், தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகரின் வலயமைப்பை இலங்கையில் வழிநடத்தும் பிரதானி என தகவல் தெரியவந்துள்ளது.