வாகனங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களை ஒட்டுதல், போலி சான்றிதழ்கள் மற்றும் பெயர் அட்டைகளை காட்டி மருத்துவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்கள் குறித்து கவனம் செலுத்தி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று பொலிஸ் மா அதிபர் தேசபந்து தின்னகோனை சந்தித்து அவ்வாறானவர்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் விளக்கமளித்ததையடுத்தே மேற்படி நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இலச்சினையுடன் கூடிய ஸ்டிக்கரை துஷ்பிரயோகம் செய்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு இதன் போது வைத்தியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
போலி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வைத்தியர்களாக நடித்து மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் வேடமணிந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் பொலிஸ் மா அதிபர் உத்தேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.