உக்ரைன்-ரஷ்ய படைகளுடன் இணைவது முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நினைத்துகொண்டு அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் பங்கெடுத்து உயிரை பணயம் வைக்க வேண்டாம் என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அல்லது தற்போது இராணுவத்தில் சேவையாற்றுவோரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷ்யாவிலும் உக்ரைனிலும் இலங்கையில் இடம்பெற்ற யுத்ததத்தை போலன்றி முற்றிலும் மாறுபட்ட யுத்தம் ஒன்று இடம்பெற்று வருவதாகவும் அந்த யுத்தமானது அதியுயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட பல்வேறு செயற்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ரஷ்ய அல்லது உக்ரைன் நாடுகளின் படைகளில் சட்டவிரோதமாக இணைந்து நிர்க்கதி நிலைக்கு ஆளாகிய இலங்கையர்கள் அனுப்பிய வீடியோக்கள் மற்றும் ஒலி நாடாக்களை ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு போட்டு காட்டப்பட்டு அங்குள்ள போரின் ஆபத்துக்கள் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இராணுவத்தில் பணிபுரியும் சிலரும் சட்டவிரோதமாக உக்ரைன் அல்லது ரஷ்யப் படைகளில் இணையும் மனநிலையில் ஈடுபடும் அபாயம் உள்ளதாகவும், எனவே அது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், ஓய்வுபெற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தி எவரேனும் அவர்களைப் போருக்கு அனுப்ப முற்பட்டால், அது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும், ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இந்நிலைமை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் அவர் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.