இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி ஒருவர் தான் செலுத்திச் சென்ற பேரூந்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் லிந்துலையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 3.10 மணியளவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக பத்தனை சந்தி வழியாக நாவலப்பிட்டி நோக்கிப் பயணிக்கும் பஸ்ஸின் சாரதியே திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நாவலப்பிட்டி டிப்போவில் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41 வயதான ஆரத்தனகே என்ற சாரதியே உயிரிழந்துள்ளார் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சாரதி கெட்டபுலா, கடியலேஹின்ன பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவர் வழமையாக நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து நேற்று மாலை 3.10 மணியளவில் நாவலப்பிட்டி நோக்கிப் பேரூந்தை செலுத்தியுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை சந்தியை பேரூந்து அண்மித்த வேளையில் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது என்று கூறி பேருந்தை வீதியோரத்தில் அவர் நிறுத்தியுள்ளார்.
உடனே பேருந்தின் நடத்துனர் சாரதி அருகே ஓடிவந்து நிலைமையை ஆராய்ந்தபோது சாரதி மாரடைப்பால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.
பின் மாற்று வாகனம் ஒன்றில் சாரதியை அருகில் உள்ள லிந்துலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சாரதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.
