களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் நேற்று (27) களுத்துறை சிறைச்சாலையில் இருந்த போது திடீரென உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த துஷார ருக்மல் சில்வா, திபுவன, பலபிட்டியகொட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
குறித்த நபர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் மே 25ஆம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திடீரென சுகவீனமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்தகைதி நேற்று (27) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை இன்று (28) களுத்துறை போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள ஸ்டேஷன் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து “கலமுல்லே தாஷி” என அழைக்கப்படும் 38 வயதுடைய தஷ்மின் மதுவந்த என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் மகளான 7 வயது சிறுமி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இறந்தவர், தனது மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
