
அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். உரிய வகையில் அத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து , பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை எனவும் அவர் கூறினார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தை முன்னிட்டு, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய எம்.பி ராமேஷ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (29) பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த முறை சம்பள நிர்ணயசபை ஊடாக 1000 ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட போதும் அதனை வழங்க முடியாது எனக்கூறி தோட்ட நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. எனினும், இறுதியில் நாம் வெற்றிபெற்றோம்.
இந்நிலையில் பல சுற்று பேச்சுகளின் பின்னரே இம்முறை ஆயிரத்து 700 ரூபா நிர்ணயிக்கப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடல்களில் கம்பனிகள் பங்கேற்கவில்லை. அது அவர்களின் தவறு.
இதற்கமைய , வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தொகையை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு, கம்பனிகள் வெளியேறலாம். இது பற்றி அரசாங்கமும் அறிவித்துவிட்டது.
1700 ரூபா என்பது தேர்தல் வாக்குறுதி அல்ல, எதிரணியில் உள்ள சிலர்தான் சம்பள விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர். கம்பனிகளை நீதிமன்றம் செல்வதற்கு தூண்டியதுகூட இந்த எதிரணி தரப்புதான்.
நாட்டில் உள்ள சட்டத்தின் பிரகாரம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தல் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்துகளை வெளியிடலாம். ஆனால் அரசமைப்பின் பிரகாரமே செயற்பாடுகள் இடம்பெறும். அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம் என இதன் போது அவர் தெரிவித்தார்.