பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று முதல் தடை

2020 பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜூன் மாதம் 10ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயாதீன குழுக்களும் பிரசாரங்களை ஆரம்பித்திருந்தன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் ஆரம்பமாகியுள்ள அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரம், இந்த அறிவித்தலை மீறும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை மறுதினம் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir