மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் மகாவலி கங்கையின் மேல் பகுதி மற்றும் கிளை ஆறுகளில் நீர் மட்டம் உயர்வதால் கிளை ஆறுகளை கடப்பதும், நீராடுவதும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என அதன் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிங்கங்கை, களுகங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் இன்று (30) உயர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் எதிர்பாராதவிதமாக ஆறுகளின் நீர்மட்டம் உயரும் என்பதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது குறித்து நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவிக்கையில்”காலநிலை மாற்றங்கள் அல்லது பிற காரணங்களை அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம். மிகக் குறுகிய நேரத்தில் கனமழை பெய்கின்றமை.
மிகக் குறுகிய காலத்தில், அதிக கொள்ளளவு நீர் தரையில் விழுவதால், தற்போதுள்ள நீர் பாய்ந்து செல்லும் வழிகள் போதுமானதாக இல்லாமை.
அதனால், இந்த நீர் நிலத்தில் சேர்கின்றது. இது மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
ஏனென்றால் இதைப் பற்றி எச்சரிக்க நேரமில்லை. நேரமும் கிடைக்காது. திடீரென வௌ்ளப்பெருக்கு ஏற்படும்.
எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே சேதத்தை குறைக்க முடியும்.
இது பெரும்பாலும் நகர்ப்புறங்களை பாதிக்கிறது..
உயரமான மலைப்பாங்கான பகுதிகளிலும் இந்த நிலை காணப்படுகிறது.” என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.