பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு பயப்படுபவர்கள் சரியான பொருளாதார வேலைத்திட்டமோ பொருளாதார குழுவோ இல்லாத கோழைகளாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையிலுள்ள நாட்டில் நாம் செல்ல வேண்டிய பாதை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வேலைத்திட்டம் குறித்து விவாதம் மற்றும் கருத்து பகிர்வுகள் கொண்டதாக விவாதம் என்பது இருக்க வேண்டும், அதன் மூலம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘சக்வல’ நட்புறவு வகுப்பறைத் திட்டத்தின் 209 வது கட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய ராஜபக்ஷ பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான நட்புறவு வகுப்பறையை கையளிக்கும் நிகழ்வில் நேற்று (30) கலந்து கொண்டு அங்கு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்; நானோ என்னை சார்ந்த குழுவோ என்றுமே விவாதங்களிலிருந்து தப்பிச் செல்வதில்லை, பொருளாதார திட்டங்களோ அதற்கான தகுந்த குழுவோ இல்லாதவர்களே இதுபோன்ற விவாதங்களிலிருந்து தப்பிச் செல்வார்கள், ஒரு பொருளாதார திட்டமோ அதற்கான குழுவோ இல்லாதவர்களுக்கு அதற்கான உரிய ஆலோசனைகளை தர நாம் தயார், எனினும் எல்லாவற்றிற்கும் முன்னதாக தலைவர்களின் விவாதம் மற்றும் பொருளாதார குழுக்களின் விவாதம் இரண்டுக்கும் ஒரேயடியாக இரண்டு தினங்களை தீர்மானம் செய்யுமாறு அவர்களை கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
