நாட்டில் உளுந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உளுந்து இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அரச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் புறக்கோட்டை சந்தையில் அதிகளவு உளுந்து கையிருப்பு எவ்வாறு உள்ளது என்பதை கண்டறியுமாறு அரச நிறுவனங்கள் நுகர்வோர் அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளன.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற போர்வையில் கொள்கலன்களில் மறைவாக அடைத்து (வரி செலுத்தாமல்) பல்வேறு இறக்குமதியாளர்களால் உளுந்து இறக்குமதி செய்யப்படுவதாலேயே சந்தையில் தேவைக்கும் அதிகமான உளுந்து கையிருப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது, எனவே, குறித்த மொத்த வியாபாரிகளின் களஞ்சியசாலைகளை கண்காணிப்பிற்கு உட்படுத்துமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசு நிறுவன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உளுந்து விவசாயிகளை பாதிக்காத வகையில் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் மற்றும் உணவு ஊக்குவிப்பு சபை என்பன தலா 500 மெற்றிக் தொன் உளுந்துவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மேற்படி அரச நிறுவனங்கள் உளுந்துவை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்ய முற்படும் போது, புறக்கோட்டை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள களஞ்சியங்களில் ஏற்கனவே சட்ட விரோதமாக கொண்டுவரப்பட பெருமளவு உளுந்து கையிருப்பில் உள்ள நிலையில், அரசு நிறுவனங்கள் கொண்டு வந்த உளுந்து தொகையை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில மோசடி இறக்குமதியாளர்கள் தாம் விற்பனை செய்கின்ற உளுந்து அரச நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்டவை எனக் கூறி அவற்றை விற்பனை செய்வதாகவும், ஆனால் அவை உண்மையில் அரச நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படாத தரமற்ற உளுந்து எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
எனவே, அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து களஞ்சியசாலைகளை பரிசோதித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்கும், குறித்த மோசடி வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
