நாடெங்கிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பல்கலைக்கழக ஊழியர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 ஆம் ஆண்டிலிருந்து தமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இடர்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள ஏற்றங்களை உறுதிப்படுத்தக்கோரி, நாட்டிலுள்ள 17 பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முடங்கிப் போயிருக்கின்றன.
இந்தப் போராட்டம் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் நேற்று 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமயத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் இராகவன் குறுக்கிட்டு, “கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினை குறித்து நான் தொடர்ச்சியாக அந்த நிருபர்களுடன் பேசி வருகிறேன். போராட்டக்காரர்களுக்குத் தீர்வைக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளிநாட்டில் நிற்கிறார். அவர் வந்ததும் தீர்வு தரப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து விடயப் பொருத்தப்பாடு இல்லாத ஒன்று என்றும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கும், பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தர் வெளிநாடு சென்றதற்கும் என்ன சம்பந்தம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத் தொழிற் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, போராட்டம் பற்றியோ அதன் தார்ப்பரியங்கள் பற்றியோ அடிப்படை விடயத்தைக் கூடத் தெரியாதவர் போல நடந்து கொள்ளும் கல்வி இராஜாங்க அமைச்சரிடமிருந்து நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்
என்ற நம்பிக்கை தமக்குத் துளி கூட இல்லை என்று கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியரொருவர் குறிப்பிட்டுள்ளார்.
