நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகநபர் தாக்கப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளர் நாயகமுமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ள நிலையில் வெலிஓயா பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சந்தேகநபர், புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் மறைந்திருந்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எம்.கே. சமிந்த என்ற குகுல் சமிந்தவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபர் கடந்த 5ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து , சந்தேகநபர் ஜூன் 6ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகநபரான குகுல் சமிந்த சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரையின் பேரில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக பொலிசாரின் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.