‘முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்ண தயாராக வேண்டாம் ‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பது தொடர்பாக கொழும்பில் விடுதியொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்கச் செல்லும் போது அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என மக்கள் கேட்பதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தெரிவாகி தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே என தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பில் கட்சி ரீதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் ஆகையால், ரணில் விக்கிரமசிங்fவை அரசாங்கத்தின் வேட்பாளர் என வெளிப்படையாக அறிவிக்க முடியாதுள்ளது எனவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்ட போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்பதற்கு தயாராக வேண்டாம்’ என ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அறிய வருகின்றது.
இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க இதுவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்தவொரு அறிவித்தலையும் விடுக்கவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
