கோட்டபாய மூலம் பாடம் கற்றோம் என்கிறார் சாமர சம்பத் எம்.பி!

‘புதியவற்றை ‘டெஸ்டிங் ‘ செய்வதில் எந்தப் பயனும் இல்லை. இப்போது டெஸ்டிங் காலம் முடிந்துவிட்டது. கடந்த முறை கோட்டபாயவை டெஸ்டிங்கு கொண்டு வந்தமை நாட்டையே அழிவிற்கு கொண்டு சென்றது’ இவ்வாறு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

வெலிமடை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் கூறும்போது, “மைத்திரிபால சிறிசேன பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் அதுபற்றி கேளுங்கள். கூட்டணியை புதிதாக தொடங்கியுள்ளோம். இன்னும் கூட்டணி முழுமைப்படவில்லை. இந்த கூட்டணியின் முதல் கூட்டமே சமீபத்தில் நடைபெற்றது. முழுமையாக கூட்டணி அமைத்து அதன் புதிய வேலைத்திட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.

அரசியல் செய்வதற்கு முதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் சவப்பெட்டியையோ, சடலத்தையோ எடுத்துச் செல்வதற்கு வாகனத்திற்கு பெற்றோல் கூட பெற முடியாத நிலை நாட்டில் இருந்தது. மக்கள் வாழக்கூட முடியாத நிலையில் இருந்தனர். எனவே, நாட்டை கட்டியெழுப்புவதே முதலாவது நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் இரண்டாவது பட்சமாகும்.

அந்தவகையில், ஜனாதிபதியும் நாங்களும் இருவேறு அரசியல் கருத்துக்களில் இருந்தவர்கள். ஆனால், நாங்கள் அரசியல் கருத்து பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் நலன் குறித்து சிந்தித்து ஜனாதிபதிக்கு அன்று உதவினோம். அவரும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றினார். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனவே, இன்றும் அதற்காக தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்”  – என்று குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply