நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய முறையை இல்லாதொழிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
அநுராதபுரம் தம்புத்தேகம வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்; தமது அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையாக வீண் விரயம், ஊழல் ஆகியவற்றை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கு, ஏற்கனவே அமுலிலுள்ள ஊழல் தடுப்புச் சட்டம், லஞ்சம் அல்லது ஊழல் சட்டம் ஆகியனவற்றை பயன்படுத்தப்படும் அல்லாவிடில் பொருத்தமான புதிய சட்டங்களை இயற்றியாவது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு செலுத்தாத வரிகள் ஒரு டிரில்லியன் ரூபாயைத் தாண்டிவிட்டன, அதில் அரசாங்கம் மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரித் தொகை ஆயிரம் பில்லியனுக்கும் அதிகம் எனவும், வெற் வரியாக மொத்தம் 163 மில்லியன் வசூலிக்கப்படாமல் இருப்பதாகவும் அதனை வசூலித்தால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அதுவே போதுமானதாக இருக்கும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.
