பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை செல்லும் பயணிகளுக்கு இன்று (17) முதல் ஒரு வாரத்திற்கு கட்டணமில்லா பயணங்களை வழங்கும் விசேட புகையிரத சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.
மேலும், கொழும்பில் இருந்து மாஹோவுக்கு வரும் புகையிரத பயணிகளுக்காக மாஹோ புகையிரத நிலையத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு விசேட பஸ் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாஹோ மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் வடக்கு ரயில் பாதையில் தற்போது நடைபெற்று வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்த காலகட்டத்தில் மாஹோவில் இருந்து அனுராதபுரத்திற்கு ரயில்கள் இயக்கப்படாது. எனவே, பக்தர்களின் வசதிக்காக, கூடுதலாக 400 பேருந்துகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மிஹிந்தலைக்கும் அனுராதபுரத்துக்கும் இடையில் புனரமைக்கப்பட்ட புகையிரத பாதையை நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (17) திறந்து வைத்தார்.
இந்த ஆண்டு, பொசன் பௌர்ணமி போயா தினம் ஜூன் 21 அன்று வருகிற அதே நேரத்தில் தேசிய பொசன் வாரம் நாளை (18) ஆரம்பமாகிறது.
இதேவேளை, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய இடங்களுக்கு இந்த ஆண்டு பொசன் கொண்டாட்டங்களுக்கு அதிகளவான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.
