மூதூரில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் !

மூதூர் – இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்கள், சமயத் தலைவர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், “மதுவைக் கொடுத்து குடியைக் கெடுக்காதே”, “ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே”, “விவசாயிகளின் உழைப்பை மதுவில் கரைக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து மூதூர் பிரதேச செயலகம் வரை சென்று, செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் மதகுருமார்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர் அடங்கிய ஐந்து பேரைக் கொண்ட குழுவினர் பிரதேச செயலாளரிடம் மகஜரைக் கையளித்து மிக நீண்ட நேரமாக பேச்சில் ஈடுபட்டனர்.

இதையடுத்து குறித்த மதுபான விற்பனை நிலையம் தற்காலிகமாக மதுவரித் திணைக்களத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் குறித்த இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இருதயபுரம் பகுதியில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறி கடந்த வியாழக்கிழமை மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply