ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்கத் தயாராகி வருகின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சட்டத்தரணியான மஹிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
ஜனாதிபதியாக தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடங்கினார். இரண்டாவது தடவையாக 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தெரிவானார்.
மூன்றாவது தடவையாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி பதவியில் இருந்து விலகினார். (05)
