’13’ உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? சஜித் மீது பொன்சேகா சீறுகிறார்!

“நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவேன் எனக் கூறும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், பெயர் குறிப்பிடாது மறைமுகமாக சஜித் பிரேமதாஸ மீது சரமாரியாக அவர் சபையில் சொற்கணைகளைத் தொடுத்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அப்பன் வீட்டு சொத்து அல்ல எனவும் அவர் சாடினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு-

“நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு எதிரணி பிரதம கொறடாவிடம் நேரம் கோரி இருந்தேன். எனக்கு நேரம் ஒதுக்க வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் பதிலளித்தார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித்துக்குச் சார்பாக வேலை செய்வீர்களா எனவும் வினவினார். இறுதியில் எனக்கு நேரம் வழங்கவில்லை. எனினும், ஆளுங்கட்சியிடம் பேசி நேரத்தைப் பெற்றுக்கொண்டேன்.

நாம் மக்களுக்குச் சாராயம் கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. ஊழல், மோசடிகளில் ஈடுபடுவதும் கிடையாது. கொழும்பில் உள்ள கசினோக்காரர்களிடம் காசு வாங்கி பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும் பொருட்களை வழங்குவதும் கிடையாது.

இப்படி செய்பவர்கள்தான் நாட்டின் தலைவராகப் பார்க்கின்றனர். கட்சித் தலைவர் என்பதற்காக ஆட்சி அதிகாரத்தை வழங்கும் முடிவை எடுத்தால் அது நாட்டுக்கே பாதகமாக அமையும்.

தந்தை ஜனாதிபதியாக இருந்தார் என்பதற்காக மகன்களை ஜனாதிபதியாக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சிந்தனையுடன் செயற்பட வேண்டும். பொருட்களைப் பகிர்பவர்களை அல்ல சிறந்த தலைவரையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள், வடக்குக்குச் செல்கின்றனர். 13 வழங்கப்படும் என உறுதியளிக்கின்றனர். தெற்கில் யார் எதிர்த்தாலும் 13 வழங்கப்படுமாம். அப்படி வழங்குவதற்கு 13 என்ன அப்பன் வீட்டுச் சொத்தா?

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காகவே படையினர் உயிர்த் தியாகம் செய்தனர். எனவே, வடக்கும், தெற்கும் என அனைத்து பகுதியிலும் உள்ள மக்கள் ஐக்கியமாக வாழ வேண்டும். தெற்கில் உள்ளவர்கள் வடக்கில் உள்ள வாக்குகளுக்காக இங்கிருந்து சென்று உறுதியளிக்கின்றனர்.

வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள், இதைப் பெற்றுக்கொடுப்போம் எனக் கூறி நாடாளுமன்றம் வருகின்றனர். 13 ஐ வழங்குவோம் என வாக்குக் கேட்கும் வேட்பாளர்களுக்கு தெற்கு மக்களும், வடக்கு மக்களும் வாக்களிக்கக்கூடாது” என்றார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply