“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நான் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியிலேயே நட்டஈடு செலுத்தி விட்டேன். இருந்தபோதும், அந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக பல்வேறு நாடுகள், பல்வேறு அமைப்புகளிடமிருந்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குப் பணம் செலுத்தப்பட்டது. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது? அந்த விபரங்களைப் பேராயர் முன்வைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கிடைத்த பணத்தில் ஒரு சதம் ரூபா கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒருவேளை இன்றிரவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எம்மால் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது. எனக்கு எதிராகத் தடையுத்தரவும், இடைக்காலத் தடையுத்தரவும் இருப்பதால் வேட்புமனுத் தாக்கலை தேர்தல் ஆணைக்குழு ஏற்காது. அதன் காரணமாக, ஆதரவாளர்கள் பற்றியும் நாடு பற்றியும் நாட்டின் எதிர்காலம் பற்றியும் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அமைப்பாளர்களின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்தே எனது தலைவர் பதவியை இராஜிநாமா செய்தேன்.
அவ்வாறு பதவியை இராஜிநாமா செய்திருக்காவிட்டால் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு துரோகம் இழைத்தவனாகிவிடுவோம். அதனால், வேட்பாளர்களுக்கு பாரதூரமான சிக்கலும் ஏற்படும். அதன் காரணமாகவே இராஜிநாமா செய்தேன்.
எனக்கு எதிராக இத்தனை தாக்குதல்களை மேற்கொள்கிறார்கள் என்றால் அதுதொடர்பில் ஒவ்வொருவரும் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எதிராக 400 வழக்குகள் இருப்பதால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளேன் என்றே கருதுகின்றேன்.
பேராயரின் தலைமைத்துவத்தில் எனக்கு எதிராக 400 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கும் கை, கால்களை இழந்தவர்களுக்கும் நட்டஈடு செலுத்துமாறு இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், நான் ஜனாதிபதியாக இருந்தபோது, பாதிக்கப்பட்ட சகலருக்கும் நட்டஈடு செலுத்தினேன். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், பல்வேறு அமைப்புகள், இலங்கையிலுள்ள உயர்மட்ட வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கர்தினாலுக்கு பணம் கிடைத்தது. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரங்களை தயவு செய்து கர்தினால் முன்வைக்க வேண்டும். எனக்கு இவ்வளவு பணம் கிடைத்தது. அவற்றை இவ்வாறு பகிர்ந்தளித்து விட்டேன் என்று பேராயர் பெயர் விவரங்களை அறிவிக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு கிடைத்த பணத்தின் ஒரு சதம் ரூபா கூட பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கவில்லை. அவ்வாறு இருக்கையில், நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிதியைப் பெற்றுக்கொடுத்தும் என்னை நட்டஈடு செலுத்துமாறு தெரிவித்து எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். இதுவே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையாகும்” – என்றார்.
