எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று (22) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள அவர்களின் கட்சியின் தலைமையகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ துணைப்படைத் தலைவர் அரசியல்வாதியாக மாறிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அரச தலைவருக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிப்பதாக புதன்கிழமை (19) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் உறுதிப்படுத்தியிருந்தார்.
பாணந்துறையில் புதன்கிழமையன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசும் போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி அரசியல்வாதியாக மாறியவர் இதனைத் தெரிவித்தார்.
