கொழும்பு நகர எல்லையில் வாகன நிறுத்துமிடங்களில் நிகழ்கின்ற மோசடிகளை தடுக்கும் நோக்கில் அவ்விடங்களில் கெமரா கட்டமைப்புகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.
வாகனம் நிறுத்துமிடங்களில் ரசீது வழங்காமை, வாகன உரிமையாளர்களை அவமதித்து பேசுதல், அதிக கட்டணத்தை வசூலித்தல் போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் இந்த கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு காலிமுகத் திடல் பகுதியில் ஏற்கனவே இவ்வாறு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மாநகர சபைக்குட்பட்ட மேலும் 132 வாகனத் தரிப்பிடங்களில் இவ்வாறு சீசீடீவி கெமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தும் சில வாகன உரிமையாளர்கள் அதற்கு பணம் செலுத்தாமல் செல்வதாகவும் எனவே, இவ்வாறான கெமரா பொருத்துதல் மூலம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதிப் பணிப்பாளர், வாகன உரிமையாளர்களுக்கான வாகன நிறுத்தலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு வசதியாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
